ரயில், விமானங்களை தமிழகத்தில் இயக்க தயக்கம் !
24 May,2020
தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க அரசு தயக்கம் காட்டுகிறது. ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணியர் வீடுகளுக்குச் செல்ல உதவும் பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாததே இதற்குக் காரணம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. நோய் தொற்று குறையாமல் பொதுப் போக்குவரத்தை துவங்க சாத்தியமில்லை என்பதால் மத்திய அரசு அனுமதித்த போதிலும் மாநில அரசு மவுனம் காக்கிறது.
நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 31 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.நோய் தொற்று குறைவாக உள்ள மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வர குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும் 50 சதவீத பயணியர் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
சிக்கல்கள்
நேற்று முதல் சென்னை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று குறையாததால் பஸ் போக்குவரத்து துவக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில் ரயில் மற்றும் விமான சேவையை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் கோரப்பட்டது; தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.விமான சேவையை துவக்கினால் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை பரிசோதனை செய்து நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிப்பது தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.
பின் அவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் ரயில் சேவையை துவக்கினால் நோய் தொற்று உள்ளவர்கள் பயணிப்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் பொது போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு தயக்கம் காட்டுகிறது.எனவே தமிழகத்தில் நோய் தொற்று குறையும் வரை ரயில் மற்றும் விமான சேவையை அனுமதிக்க வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 710 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
அபாயம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நோய் பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன் பொது போக்குவரத்தை அனுமதித்தால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதை உணர்ந்து மக்களும் நோய் பரவலை தடுக்க உரிய விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் போக்குவரத்து சாதனங்களை இயக்க உதவியாக இருக்கும். மக்கள் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
ரயில்கள் இயக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு ரயில்வே கடிதம்
'நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 'ஏசி' இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.அதன்படி 100 ரயில்களுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.இந்த ரயில்களுக்கு 21ம் தேதியில் இருந்து முன்பதிவு நடந்து வருகிறது. கேரளாவுக்கு மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன.தமிழக அரசு அனுமதி இல்லாததால் தமிழகத்திற்கு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் 21ம் தேதியில் இருந்து புதுடில்லி -- சென்னை இடையே ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.சென்னை தவிர தமிழகத்தின் மற்ற நகரங்கள் இடையே மாநில அரசின் அனுமதியுடன் படிப்படியாக ரயில் போக்குவரத்தை துவங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
கோவை -- மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ள ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.சென்னை எழும்பூர் - - மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை விழுப்புரத்தில் இருந்து மதுரை வரை; திருச்சி -- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சி -- நாகர்கோவில் வரை இயக்க திட்டமிட்டுள்ளது.கோவை -- சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை -- காட்பாடி வரை இயக்க திட்டமிட்டுள்ளது.இதற்கு அனுமதி கோரி ரயில்வே வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால் ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.