நாடு, ஊரடங்கிலிருந்து மீண்டு, இயல்புநிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான சேவைகள், நாளை துவங்க உள்ள நிலையில், ரயில் போக்குவரத்து, அடுத்த மாதம், 1ம் தேதி துவங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மார்ச், 25 முதல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது. பின், மருத்துவ அவசர உதவிக்காக, வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர, சரக்கு போக்குவரத்துக்காக மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.
நான்காம் கட்ட ஊரடங்கை, பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தபோது, இம்மாதம், 31ம் தேதி வரை, உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி வைப்பதாக, விமானப் போக்கு வரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.
மாநிலங்கள் முடிவு
தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, நாடு முழுதும், 'ஏசி' வசதி இல்லாத பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது. மாநிலத்துக்குள் பஸ் போக்குவரத்து துவக்குவது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தை துவக்குவது குறித்தும், அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில், பஸ் போக்குவரத்தும் துவங்கியுள்ளது.இதையடுத்து, 'உள்நாட்டு விமான சேவை, வரும், 25ம் தேதி முதல் துவங்கப்படும்' என, விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
நடவடிக்கை
விமானத்தில் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. பைலட் உட்பட விமானத்தில் செல்லும் ஊழியர்களுக்கும், வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.இதுபற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை பயணியர் உறுதி செய்தபின் தான், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.அவர்கள், மொபைல் போனில் உள்ள ஆரோக்கிய சேது செயலியில், சிவப்பு நிறம் காட்டப்பட்டால், அந்த பயணியர், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணியருக்கு, முக கவசம், கையுறைகள் கிருமி நாசினி வழங்கப்படும்.
விமான பைலட்கள் உட்பட ஊழியர்களுக்கு, தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படும்; அவற்றை அணிந்து தான், ஊழியர்கள் பயணிக்க வேண்டும். விமானங்களை, 24 மணி நேரத்துக்கு ஒருமுறை, கிருமி நாசினி கொண்டு, சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், ரயில் சேவையும், வரும், 1ம் தேதி துவங்கப்படும் என, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 'ஏசி' பெட்டிகள் இணைக்கப்படாத, 200 ரயில்கள், ஜூன், 1ம் முதல் இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, 'ஆன்லைனில்' நடந்து வருகிறது.ஏற்கனவே, கடந்த, 1ம் தேதி முதல், ரயில்வே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அத்துடன், பயணியர் வசதிக்காக, டில்லியிலிருந்து, முக்கிய நகரங்களுக்கு, 12ம் தேதி முதல், சிறப்பு ரயில்களையும் ரயில்வே இயக்கி வருகிறது.வைரஸ் பரவல் குறையாத நிலையிலும், ஊரடங்கிலிருந்து, நாடு இயல்பு நிலைக்கு திரும்ப, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகஸ்டிலிருந்து சர்வதேச விமான சேவை
'சர்வதேச விமான சேவையை, ஆகஸ்டில் இருந்து துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி கூறினார்.உள்நாட்டு விமான சேவைகள் நாளை துவக்கப்படும் நிலையில், 'ஆன்லைனில்' பொது மக்களுடன், ஹர்தீப் சிங் பூரி நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது:'ஆரோக்கிய சேது' செயலியில், பச்சை நிறம் காட்டிய பயணியர், விமானத்திலிருந்து இறங்கிய பின், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல, செயலியில் சிவப்பு நிறம் காட்டினால், பயணியர் விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில், சர்வதேச விமான சேவையை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு மறுப்பு
சென்னை மற்றும் கோவைக்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. 'மே 25 முதல் தமிழகத்தில் விமான சேவையை துவக்க வேண்டாம்; ஜூன் மாதத்திற்கு பின், துவக்கலாம்' என, விமான போக்குவரத் துறை அமைச்சருக்கு, தமிழக முதல்வர் இ.பி.எஸ்,
கடிதம் எழுதியுள்ளார்.