நாட்டில் துவங்கப்படவுள்ள, உள்நாட்டு விமான பயணத்துக்கான வழிமுறைகளை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, விமான பயண கட்டணங்களை நிர்ணயித்து, மத்திய அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கி இருந்த உள்நாட்டு விமான சேவைகள், வரும், 25ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில், அதற்கான வழிமுறைகளை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:வரும், 25ம் தேதியிலிருந்து, மூன்றில் ஒரு பங்கு விமானங்களை மட்டுமே இயக்கலாம். விமானம் புறப்படும் நேரத்திற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, பயணியர் விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும்.
ஆரோக்கிய சேது
விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டை, இணையத்தில் பதிவு செய்து, 'பிரின்ட்' எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே, விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இத்துடன், பைகளுக்கான, 'டேக்' அட்டையை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். கை பையைத் தவிர, ஒரே ஒரு, 'செக்-இன்' பைக்கு மட்டுமே அனுமதி உண்டு. விமான நிலையத்திற்குள் நுழையும் பயணியர், முக கவசம் மற்றும் கையுறையை அணிவது கட்டாயம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பயணிப்பதற்கான அனுமதி சீட்டு, பைகளுக்கான அட்டையுடன், ஆரோக்கிய சேது செயலி மூலம், தங்கள் உடல்நலத்தை நிரூபிக்க வேண்டும். செயலியில், பச்சை நிறம் வந்தால் மட்டுமே, பயணியர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.
விமானங்களில் உணவு வினியோகிக்கப் படாது; செய்தித் தாள்கள் கொண்டு வர அனுமதி இல்லை.
விமானம் புறப்படும், 60 நிமிடத்திற்கு முன்பே, பயணியரை விமானத்தில் ஏற்றும் பணி துவங்கும். 20 நிமிடத்திற்கு முன், விமான வாயில் மூடப்பட்டு விடும்.முக கவசம், கிருமி நாசினி அடங்கிய பாதுகாப்பு பொருட்கள், பயணியருக்கு வழங்கப்படும். முதியோர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர், விமான பயணங்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஏழு கட்டங்கள்
இதற்கிடையே விமான கட்டணங்கள் குறித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று கூறியதாவது:உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன. பயண கால அளவின் அடிப்படையில், இவை, ஏழு கட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில், 40 நிமிடங்களுக்கு குறைந்த பயண நேரத்தை கொண்ட விமான சேவைகள் வரும். இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது கட்டங்களில், 40-60; 60-90; 90-120; 120-150 நிமிட பயண நேரங்களை கொண்ட விமான சேவைகள் வரும். ஆறு மற்றும் ஏழாவது கட்டங்களில், 150-180 நிமிடங்கள்; 180-210 நிமிடங்கள் கால அளவை கொண்ட விமான சேவைகள் வரும்.
40 சதவீதம்
உதாரணத்திற்கு, டில்லி - மும்பை இடையிலான விமான சேவைக்கு, குறைந்தபட்சமாக, 3,500 ரூபாயும், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாயும், கட்டணமாக வசூலிக்கலாம்.
இந்த நடைமுறை, வரும் ஆகஸ்டு, 24ம் தேதி வரை அமலில் இருக்கும்.விமானத்தின், 40 சதவீத டிக்கெட்டுகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணத்திற்கு இடையில் வரும் தொகையை, கட்டணமாக வசூலிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.