பயணியர் விமான சேவைக்கு, இம்மாதம், 31 வரை தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சில தனியார் விமான நிறுவனங்கள், ஜூன் மாதத்துக்கான முன்பதிவை துவக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைக்கு, கடந்த மார்ச், 25 முதல் தடை விதிக்கப்பட்டது. முதல்கட்ட ஊடரங்கின் போது, விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணத்தை திருப்பி அளிக்க, விமான சேவை நிறுவனங்கள் மறுப்பதாக புகார் எழுந்தது.
உரிய நேரத்தில் தகவல்
இதையடுத்து, பயணியருக்கு கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு, விமான நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.இந்நிலையில் இம்மாதம், 31 வரை, விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்தது. மேலும், 'உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்து, எப்போது துவங்கும் என்பது குறித்து, விமான சேவை நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது.இதற்கிடையே, 'இண்டிகோ, விஸ்டாரா' விமான சேவை நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல், உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை துவக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், இது குறித்து, அந்நிறுவனங்களிடம் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நம்ப வேண்டாம்
'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது, 'தங்கள் சர்வதேச விமான சேவை, ஜூன், 15 வரை மூடப்பட்டு உள்ளது' என, அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.இதுகுறித்து, இந்திய விமான பயணியர் சங்க தேசிய தலைவர் சுதாகர ரெட்டி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:ஜூன், 1ம் தேதி முதல், விமான சேவை துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், 'இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர்' நிறுவனங்கள், டிக்கெட் முன் பதிவை துவக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை நம்பி, டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம். விமான சேவை துவங்கவில்லை எனில், பணத்தை திருப்பி தராமல், வேறு தேதிக்கு பயணத்தை மாற்றிக் கொள்ள, விமான நிறுவனங்கள் வலியுறுத்தும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை தகவல் அளிக்க, 'இண்டிகோ' முடிவு
'இண்டிகோ' விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சிறப்பு விமானங்களை தவிர, அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இருப்பதை அடுத்து, துல்லியமான வானிலை நிலவரங்களை அறிவதில் சிரமம் நீடிக்கிறது. இதை மனதில் கொண்டு, விமான சேவை துவங்கியவுடன், 5,000 முதல், 10 ஆயிரம் அடி உயரத்தில், காற்று மற்றும் ஈரப்பதத்தின் நிலவரம், தட்பவெப்ப நிலை ஆகிய தகவல்களை, இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு உடனுக்குடன் அளிக்க, இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவல்களை, ஒவ்வொறு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை, கட்டாயம் அளிக்க வேண்டும் என, விமானிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.