இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்தது!
15 May,2020
இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 81ஆயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3942 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 98 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 27 ஆயிரத்து 969 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 51ஆயிரத்து 379 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தமிழத்தில் நேற்று (வியாழக்கிழமை) புதிதாக 447 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் 363 பேர் புதிதாக அடையாலம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 5637 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழகத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள்தோறும் விரைவு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், நோய்த் தொற்றை தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளையில் மற்றொரு புறம் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்