இங்கிலாந்தில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அனுமதி!
13 May,2020
இங்கிலாந்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இங்கிலாந்தில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இங்கிலாந்தின் பூங்காக்களில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதி வழங்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குழிப்பந்தாட்டம் உள்ளிட்ட, தனிமனித இடைவெளி பேணப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வீடுகளில் இருந்து தமது பணிகளை மேற்கொள்ள முடியாத உத்தியோகத்தர்கள் தத்தமது அலுவலகங்களுக்கு செல்லலாம் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வினை அறிவித்திருந்த நிலையில், பிரித்தானியாவில் ஏறக்குறைய கடந்த ஏழு வாரங்களாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள் வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இது வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக 2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய 32 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.