'தொற்று இல்லை என, ஐக்கிய அரபு எமிரேட்சின் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமே, தாயகம் திரும்ப முடியும்' என, இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக, வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் பலர், நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், இன்று முதல் அழைத்து வரப்படுவர் என, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், தாயகம் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை அழைத்து வர, இரண்டு,'ஏர் இந்தியா' விமானங்கள், இன்று அங்கு செல்கின்றன. அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பாலானோர், கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்கள் தான், தாயகம் திரும்புவதற்கு, இந்திய துாதரகத்தில் அதிகளவில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய துாதர் பவன் கபூர் நேற்று கூறியதாவது: தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள அனைவருக்கும், விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என, ஐக்கிய அரபு எமிரேட்சின் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிவிக்கப்படுபவர்கள் மட்டுமே, தாயகத்துக்கு திரும்ப அனுமதிக்கப்படுவர். மேலும், தாயகம் திரும்பியவுடன், தனிமை முகாமில், 14 நாட்கள் கட்டாயம் தங்கியிருக்கவும், அதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்து, கையெழுத்திடுபவர்கள் மட்டுமே, தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர்.
தாயகம் திரும்பும் பயணியருக்கு, இரண்டு முக கவசங்கள், இரண்டு கையுறைகள், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்படும். விமான பயணத்தில், சமூக விலகல் உட்பட, விமான போக்குவரத்து துறையின் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.