இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
முதல் இடத்தில் மராட்டியம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து இருக்கிறது. இவர்களில் 111 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 12 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 5,428 பேரும், டெல்லியில் 4,549 பேரும், தமிழ்நாட்டில் 3,023 பேரும், மத்தியபிரதேசத்தில் 2,942 பேரும், ராஜஸ்தானில் 2,886 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,742 பேரும், ஆந்திராவில் 1,650 பேரும், தெலுங்கானாவில் 1,082 பேரும், பஞ்சாபில் 1,102 பேரும், மேற்கு வங்காளத்தில் 963 பேரும், காஷ்மீரில் 701 பேரும், கர்நாடகத்தில் 642 பேரும், பீகாரில் 517 பேரும், கேரளாவில் 500 பேரும், அரியானாவில் 442 பேரும், ஒடிசாவில் 163 பேரும், ஜார்கண்டில் 115 பேரும், சண்டிகாரில் 94 பேரும், உத்தரகாண்டில் 60 பேரும், சத்தீஷ்காரில் 57 பேரும், அசாமில் 43 பேரும், லடாக்கில் 41 பேரும், இமாசலபிரதேசத்தில் 40 பேரும், அந்தமானில் 33 பேரும், திரிபுராவில் 16 பேரும், மேகாலயாவில் 12 பேரும், புதுச்சேரியில் 8 பேரும், கோவாவில் 7 பேரும், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாசலபிரதேசத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 11,761 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
ஒரே நாளில் 83 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் 28 பேரும், மராட்டியத்தில் 27 பேரும், மத்தியபிரதேசத்தில் 9 பேரும், ராஜஸ்தானில் 6 பேரும், ஆந்திராவில் 3 பேரும், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் தலா 2 பேரும், அரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகம், உத்தரகாண்டில் தலா ஒருவரும் என நேற்று ஒரே நாளில் மட்டும் 83 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 1,389 ஆக அதிகரித்து உள்ளது.
இதுவரை அதிகபட்சமாக மராட்டியத்தில் 548 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். குஜராத்தில் 290 பேரும், மத்தியபிரதேசத்தில் 165 பேரும், ராஜஸ்தானில் 71 பேரும், டெல்லியில் 64 பேரும், உத்தரபிரதேசத்தில் 45 பேரும், மேற்கு வங்காளத்தில் 35 பேரும், ஆந்திராவில் 36 பேரும், தமிழ்நாட்டில் 30 பேரும், தெலுங்கானாவில் 26 பேரும், கர்நாடகத்தில் 26 பேரும், பஞ்சாபில் 19 பேரும், காஷ்மீரில் 8 பேரும், அரியானாவில் 5 பேரும், கேரளா, பீகாரில் 4 பேரும், ஜார்கண்டில் 3 பேரும் பலியாகி இருக்கிறார்கள். மேகாலயா, ஒடிசா, இமாசலபிரதேசம், அசாம் உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் இறந்திருக்கிறார்கள்.
மோசமாக இல்லை
மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், இப்போதைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை மோசமாக இல்லை என்றும், நோய்த்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல் பட்டால் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே வெளிமாநில தொழிலாளர் களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், இதற்காக தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வாங்குவது பற்றி ஒருபோதும் பேசப்படவில்லை என்றும், பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வே துறையும், மீதி 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.