ரயில் சேவை, விமான சேவைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இரத்து
03 May,2020
புறநகர் மற்றும் பயணிகள் ரயில் சேவை, விமான சேவை போன்றவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் கட்டமாக, மே 17 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள், வரும் 17ம் திகதி வரை இயங்காது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதேநேரம் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்களை சொந்த மாநிலங்களில் சேர்ப்பதற்கான சிறப்பு ரயில் சேவை இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி, தேவைக்கு ஏற்றவகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதில் பயணிக்க விரும்புவோர், மாநில அரசை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் போக்குவரத்து, பொதிகள் போக்குவரத்து சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17-ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சரக்கு விமானங்களுக்கும், சிறப்பு விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.