ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ஊக்கச் சலுகை திட்டத்தை மத்திய அரசு இன்று அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில், 60 சதவீதம் அடியோடு முடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம், பெண்களுக்கு மாதம், 500 ரூபாய், மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, இலவச எரிவாயு, 80 கோடி பேருக்கு, 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்ட, 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்தது.
ஊக்கச் சலுகைகள்
இதைத் தொடர்ந்து, நிதிச் சந்தையின் சுணக்கத்தை போக்க, ரிசர்வ் வங்கி, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி குறைப்பு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறைக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட ஊக்கச் சலுகைகளை அமல்படுத்தியது. அடுத்து, ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர துறைகளுக்கான ஊக்கச் சலுகை திட்டத்தை மத்திய அரசு இன்று அறிவிக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர், கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழு, இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கடன் பத்திர வெளியீடு
இதற்கிடையே, 'நாட்டின் பொருளாதார இழப்பை சரிகட்ட, மத்திய அரசு, மொத்தம், 11.20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவிக்கும்' என, தர நிர்ணய நிறுவனமான, 'க்யூட் ரேட்டிங்ஸ்' தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, ஊக்கச் சலுகை திட்டத்திற்கு தேவையான நிதியை, கடன் பத்திர வெளியீடு, கடன் உறுதி பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் திரட்டும்.எனினும், கூடுதலாக தேவைப்படும், 3 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு, நிதிப் பற்றாக்குறை குறைவாக உள்ள, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களை பொறுப் பேற்குமாறு கேட்டுக் கொள்ளும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.