மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கத் தயாராகும் எயார் இந்தியா!
30 Apr,2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இடைநிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எயார் இந்தியா திட்டமிட்டு வருகிறது.
அந்தவகையில் மே மாத நடுப்பகுதியில் முதற்கட்டமாக பகுதியளவில் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க நிறுவனத் தலைமை எதிர்பார்த்துள்ளது.
இதற்கமைய எயார் இந்தியா நிறுவனம் அதன் விமானிகளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் ஊரடங்குக்குப் பின்னர் மே மாத நடுப்பகுதியில் 25-30 வீதம் வரையிலான விமானப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்தைத் தொடங்குவதற்காக விமானிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, விமானிகள் வீட்டுக்கும் விமான நிலையத்துக்கும் சென்றுவருவதற்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்யுமாறு செயல் இயக்குநரையும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.