''கொரோனா பரிசோதனைக்காக, சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட கருவிகளில், செயல்படாத கருவிகள் அனைத்தும், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும்,'' என, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக, 'ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்' எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவிகளை, பல மாநிலங்கள் இறக்குமதி செய்தன. குறிப்பாக, சீனாவிலிருந்து, அதிக அளவில் வாங்கப்பட்டன.
ஆனால், பரிசோதனைகள் துவங்கிய, இரு நாட்களுக்குள், இந்த கருவிகள், துல்லியமான முடிவுகளை தரவில்லை என்பதைக் கண்டு, மாநில அரசுகள், அதிர்ச்சியடைந்தன. இந்தக் கருவிகள் பழுதானவை என்ற குற்றச்சாட்டால், மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. இதையடுத்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்பாட்டை நிறுத்துமாறு உத்தரவிட்டதுடன், இது குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், நேற்று அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது:சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட பரிசோதனை கருவிகளில், செயல்படாத அனைத்தும், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும். இந்த கருவிகளுக்காக, ஒரு காசு கூட, மத்திய அரசு தரவில்லை. இப்பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மாநில அரசுகளுக்கு, உதவியும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காகவே, உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை, மத்திய அரசு அனுப்புகிறது.சிலர் குற்றம் சாட்டுவதுபோல, மாநில அரசுகளை கண்காணிப்பதற்காக, நாங்கள், இந்தக் குழுக்களை அனுப்பவில்லை. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து, அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக, இந்த குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.இவ்வாறு, அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -