விமான சேவைகள் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை - மந்திரி ஹர்தீப் சிங் பூரி
19 Apr,2020
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரெயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் வரும் 20-ம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள் சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே, மே 4-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் 1 முதல் சர்வதேச விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி சமூக வலைதளங்களில் தெளிவுபடுத்தி உள்ளார்.
அதில், அரசின் முடிவுக்கு பின்னர் முன்பதிவுகளை தொடங்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து அரசு இதுவரை முடிவு மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்