விமானங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் -
17 Apr,2020
விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையும் என 2 கட்டங்களாக 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்த காலக்கட்டங்களில் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது எனவும், பணத்துக்கு பதிலாக அந்த டிக்கெட்டை எதிர்கால பயணத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விமான நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் அறிவித்து வந்தன.
ஆனால் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு எந்தவித பிடித்தமும் இன்றி முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து மார்ச் 25-ந் தேதி முதல் மே மாதம் 3-ந் தேதி வரை விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது