ஏழைகளுக்கு மட்டுமே இலவச பரிசோதனை : உச்சநீதிமன்றம்
                  
                     14 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	கொரோனா வைரஸ் பரிசோதனையை ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மறுஉத்தரவு பிறப்பித்துள்ளது.
	இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. அதேசமயம் ரூ.4,500க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
	இந்த அறிவிப்பையடுத்து, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.4,500 வசூலிக்கக்கூடாது, கொரோனா பரிசோதனையை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
	இதையடுத்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
	இந்நிலையில் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏழைகளுக்கு மட்டுமே இலவச பரிசோதனையை செய்ய வேண்டும் என உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
	மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.