இலங்கையில் சிக்கித்தவிக்கும் 80 இந்தியர்கள் – உடனடியாக மீட்குமாறு கோரிக்கை!
                  
                     14 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	இலங்கையில் சிக்கித்தவிக்கும் 80 இந்தியர்கள் தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
	ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.
	அவர்கள் அங்கு விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
	இந்தநிலையிலேயே தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
	இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கையில் சிக்கி தவிக்கும் கடற்படை மாலுமி ரிபுசுதன் பிரசாத்,
	“எனது மனைவி மன அழுத்தத்தில் உள்ளார். அவளுடைய மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் முடிந்துவிட்டன. இதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  என் மனைவி, எனது இரண்டு குழந்தைகளுடன் மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன்.
	நாங்கள் கடந்த 23ஆம் திகதி டுபாய்க்கு சென்று இறுதியாக ஏப்ரல் 1ஆம் திகதி கொல்கத்தாவிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் மார்ச் 20ஆம் திகதி இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டதால் இங்கேயே சிக்கி தவித்து வருகிறோம்.
	வீட்டிற்கு திரும்பிச் செல்லக்கூடிய எந்தவொரு தளர்வு குறித்தும் எந்த தகவலும் இல்லாமல் முடிவில்லாமல் போகிறது. தற்போது நாங்கள் விடுதியில் தங்கி உள்ளோம். பணம் குறைந்து கொண்டே போகிறது. எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
	இதேபோன்று கருத்து வெளியிட்டுள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த கடற்படை மாலுமியான அபிநவ் சவுத்ரி,
	“தனிமை, நிதி நெருக்கடி மற்றும் மனச்சோர்வு அதிகமாகி உள்ளது. எனது உடலும் மனமும் இனி தனிமைப்படுத்த முடியாது. ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற செய்தியுடன் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம்.
	கொல்கத்தாவில் எனது மனைவி, ஆறு வயது குழந்தை மற்றும் வயதான பெற்றோர்கள் நான் திரும்புவேன் என காத்திருக்கிறார்கள். இதற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
	இதேபோன்று இலங்கையில் 80 இற்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திரமோடிக்கு இலங்கையில் சிக்கி தவித்து வரும் நிலைமை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து அங்கிருந்து மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்