ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினர்: ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த பொலிஸார்
                  
                     13 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவர்களுக்கு வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளனர்.
	அதாவது, அவர்களிடம் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
	இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகின்ற நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
	இந்நிலையில் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு பொலிஸார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர். அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.
	உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 10பேர் ஊரடங்கு உத்தரவை மீறி கங்கை நதிக்கரையோரம் சுற்றித் திரிந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
	அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்தமை தெரியவந்தது.
	இதையடுத்து, ஊரடங்கை மீறியதற்காக அவர்களிடம், ‘நான் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.
	தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக பொலிஸார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்று 500 முறை குறித்த வாசகத்தை எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை பொலிஸார் எச்சரித்து அனுப்பினர்.