இந்தியாவில் ஒரேநாளில் 43 பேர் உயிரிழப்பு: 10 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
13 Apr,2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 331ஆகப் பதிவாகியுள்ளது.
அந்நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் மரணித்துள்ளதுடன் புதிய தொற்றாளர்களாக 759 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு குணமடைந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில் அங்கு மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்பும் 150ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் 1043 பேருக்கும், டெல்லியில் 1154 பேருக்கும், ராஜஸ்தானில் 804 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 564 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 483 பேருக்கும், தெலுங்கானாவில் 504 பேருக்கும், கேரளாவில் 376 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், வைரஸ் பரவலின் அடுத்தக்கட்டமான சமூகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன.
எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.