பஞ்சாபில் காவல்துறை அதிகாரியின் கையை வெட்டிய நிஹாங் சீக்கியர்கள்
13 Apr,2020
பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் காய்கறி சந்தை ஒன்றில் காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கூட்டமாக வந்த நிஹாங்குளை (சீக்கிய மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள்) கட்டுப்படுத்த முயன்ற போது, அவர்கள் உதவி துணை ஆய்வாளரான ஹர்ஜீத் சிங்கின் கையை வெட்டியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் மே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், “இன்று காலை 6 மணி அளவில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு காய்கறி சந்தைக்குள் நிஹாங்குகள் நுழைந்தனர். போலீஸார் அவர்களை நிறுத்த முயற்சித்த போது ஒரு காவல்துறை அதிகாரியின் கையை அவர்கள் வெட்டினர்” என பஞ்சாப் காவல்துறை தலைவர் தின்கர் குப்தா கூறினார்.
இந்த நிகழ்வில் மேலும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
“தாக்கியவர்கள் நிஹாங் குருத்வாராவிற்கு உடனே தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் காவல்துறை அங்கு சென்று இரண்டரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உள்ளே நுழைந்தோம். அவர்கள் கத்தி மற்றும் அரிவாள்களோடு வெளியே வந்தனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது” என்று குப்தா தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.