சீனாவிடம் கருவிகளை வாங்கியது தமிழக அரசு!58 தனியார் மருத்துவமனைகள்அரசின் கட்டுப்பாட்டுக்குள்
09 Apr,2020
கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.
தமிழகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரேநேரத்தில் ஒரு இலட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெறமுடியும் எனவும் கூறப்படுகின்றது. கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
துரித பரிசோதனைக் கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ். மப்பிங் மூலமாக எந்தெந்தத் பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
58 தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆந்திராவில் 58 தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்த அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 58 தனியார் மருத்துவமனைகளில் 19 ஆயிரத்து 114 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஆயிரத்து 286 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், தனிமைப்படுத்தத் தேவையான 717 படுக்கைகளும், 17 ஆயிரத்து 111 சாதாரண படுக்கைகளும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் 530 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது!
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.
166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 669 பேரும், தெலுங்கானாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில், தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 345ஆக உள்ளது. இங்கு அதிகபட்சமாக 83 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 இல் இருந்து 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழப்பு 149இல் இருந்து 166 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 411இல் இருந்து 473ஆக உயர்ந்துள்ளது.