இந்தியாவில் மேலும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?
07 Apr,2020
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மார்ச் 24ம் திகதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார்.
ஊரடங்கு தற்போது இரண்டாம் வாரத்தில் உள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் 8 நாட்கள் உள்ளன. ஊரடங்கு எப்போது முடியும் என்று மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்களும் ஊரடங்கு முடிவதற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதாவது, நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதாவது, ஜூன் மாதம் முதல் வாரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியானாலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இருப்பினும், அமைச்சரவை கூட்டம் முடிந்தது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “உலகத்தில் தற்போதைய சூழலை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்டால், உரிய நேரத்தில் அது அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பேசிய தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவ், “என்னுடைய தனிப்பட்ட கருத்து ஊரடங்கு கண்டிப்பாக நீட்டிக்கப்பட வேண்டும் என்பதுதான். பல்வேறு உயிர்களை நாம் காப்பாற்ற வேண்டியுள்ளது. பின்பு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்” என்றார்