இந்தியாவில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு: இவர்களில் 30 வீதம் பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்!
06 Apr,2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் இதுவரை 109 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும், 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கடுத்தபடியாக, தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் குணமடைந்துள்ள அதுவெளை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில், 503 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 18 பேர் குணமடைந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பட்டியலில் தெலுங்கானா 4ஆவது இடத்தில் உள்ளதுடன் அங்கு, 321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 34 பேர் குணமடைந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதன்முதலில் கொரோனா தொற்றுக்குளானவர் கண்டறியப்பட்ட கேரளத்தில் 314 பேர் பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக 55 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
6ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தானில், 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 21 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இதுவரை யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை.
227 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உத்தரப்பிரதேசம் 7ஆவது இடத்திலும், 226 பேருக்கு உறுதி செய்யப்பட்டு ஆந்திரா 8ஆவது இடத்திலும் உள்ளன. 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மத்தியப் பிரதேசம் 9ஆவது இடத்திலும், 151 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கர்நாடகம் 10ஆவது இடத்திலும் உள்ளன. குஜராத்தில் 122 பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் 106 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 100இற்கும் குறைவாகவே உள்ளது. மிகக்குறைந்த அளவாக மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.
இதேவேளை, இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, சுமார் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன