ஏப்ரல் 15 முதல் ரயில், விமானங்களில் முன்பதிவு தொடக்கமா?
02 Apr,2020
நாடு முழுவதும் பரவலாக கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் உத்தரவிட்டார். இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அவர்கள் இதனை மறுத்து ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்
இதனை அடுத்து லட்சக்கணக்கானோர் வெளியூர்களில் தற்போது சிக்கியுள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னராவது தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து விமானம் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில தனியார் விமான நிறுவனங்களும் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் ரயில்களிலும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை என்பதும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது