கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு
01 Apr,2020
இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. டெல்லியில் தில்ஷத் தோட்டம், நிஜாமுதீன் ஆகிய இடங்களும் மற்றும் நொய்டா, மீரட், பில்வாரா, அகமதாபாத், காசர்கோடு, பத்தனம்திட்டா, மும்பை, புனே ஆகிய இடங்களிலும் நோய் வேகமாகப் பரவிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 10இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த இடம் ஒரு தொகுதியாகக் கணக்கிடப்படுகிறது. பல தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தால், அங்கு நோய் வேகமாக பரவிவருவதாக கணக்கிடப்படுகிறது.