விமான நிறுவனங்கள் திவாலாகும் ஐ.ஏ.டி.ஏ., பிரதமருக்கு கடிதம்
29 Mar,2020
புதுடில்லி : இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் ஆபத்தில் உள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான, ஐ.ஏ.டி.ஏ., பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
மார்ச், 24ம் தேதியிட்ட இக்கடிதத்தில், ஐ.ஏ.டி.ஏ.வின் டைரக்டர் ஜெனரல் குறிப்பிட்டிருப்பதாவது:இந்திய விமான நிறுவனங்கள், தற்போது திவால் ஆகும் நிலைக்கு செல்லும் ஆபத்தில் உள்ளன. கொரோனா பாதிப்பால் இவை, 5.75 லட்சம் ஊழியர்களை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது.பயணியர் எண்ணிக்கையில், 9 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஆண்டில், பயணியர் மூலமான வருவாய், 2.1 பில்லியன் டாலர் அதாவது, இந்திய
மதிப்பில், 15 ஆயிரத்து 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
தற்போது நாடு முடக்கத்தில் இருப்பதால், அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமான
சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன.அரசு தற்போதே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொற்று நோய்க்கு பிறகான பொருளாதார மீட்சி, பெரிய அளவில் தடைபடும்.ஏற்கனவே வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் செலவு குறைப்பு
நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இண்டிகோ, 25 சதவீதம் வரை ஊதிய குறைப்பை
அறிவித்துள்ளது. கோஏர் நிறுவனம், வெளிநாட்டு விமானிகளை பணி நீக்கம் செய்துள்ளது.
விஸ்டாரா நிறுவனம், ஊதியமில்லா கட்டாய விடுப்பில் மூத்த ஊழியர்களை அனுப்பி
உள்ளது.நோய் தொற்று பாதிபுகள் ஏற்படுவதற்கு முன், இந்திய விமான போக்குவரத்து துறை, பொருளாதாரத்தில், 2.63 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்பை வழங்கி வந்துள்ளது.மேலும், ஜி.டி.பி.,யில், 1.5 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. அத்துடன், 62 லட்சம் வேலைகளையும் வழங்கி வந்துள்ளது.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.