கொரோனா அச்சம் காரணமாக மரத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்!
29 Mar,2020
சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர்.
பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், வைத்தியர்களை சந்தித்துள்ளனர். அப்போது வைத்தியர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் துணியை கட்டி அதில் தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வாகனம் மூலம் வந்தோம். தற்போது நலமாக உள்ளோம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி வைத்தியர் அறிவுரை வழங்கினார். ஆனால், எங்களது வீட்டில் தனியாக வசிப்பதற்கு தனி அறை இல்லை.
இதனால், நாங்கள் எங்கு வசிக்கலாம் என்பது குறித்து இளைஞர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அப்போது எடுத்த முடிவின்படி நாங்கள் மரத்தில் தனியாக வசித்து வருகிறோம்.
எங்களுக்கு தேவையான வசதி உள்ளது. காலை உணவு எங்களை தேடி வருகிறது. மதியமும், இரவும் அரிசியில் செய்யப்பட்ட உணவை உண்கிறோம்.
குடி தண்ணீரும் கிடைக்கிறது. தேவைப்பட்டால், உணவு சமைக்கவும், தண்ணீர் காய்ச்சவும் அடுப்பு எங்களிடம் உள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.