கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்காக கடந்த வியாழக்கிழமையன்று பல நிதிச் சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாட்டில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் மூன்று மாதங்களில் மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வகை ஒன்றும் வழங்கப்படும் என்பது அவருடைய முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று.
மேலும், விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
60 வயதை கடந்தவர்கள், விதவைகள், ஏழை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வங்கி நேரடி பணம் செலுத்தும் திட்டத்தின்கீழ் ஒருமுறை 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
பிரதமர் மோதியின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கின் காரணமாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு இந்த நிவாரணங்கள் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதைவிட, பொருளாதார ரீதியில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் இருக்கிறது. இது தொடர்பாக பிபிசியிடம் விரிவாகப் பேசினார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.
"1.70 லட்சம் கோடி ரூபாய் இதற்காக செலவழிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், இதற்கான பணம் எங்கேயிருந்து வரும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே, கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருந்தது. அதற்குப் பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வந்தபோது, பற்றாக்குறை மேலும் 1.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட 4.15 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளபோது, இந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வரும் என்ற கேள்வியெழுகிறது" என்கிறார் ஜோதி சிவஞானம்.
தவிர, மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்கள் ஏற்கனவே உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரதான் மந்த்ரி கிஸான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் பணம் வழங்குவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். முதல் தவணையை ஏப்ரல் மாதம் தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, அவ்வளவுதான்.
"இந்தத் திட்டத்தில் பயன்பெறத்தக்க பல லட்சம் விவசாயிகள் அடையாளம் காணப்படவில்லை. கடந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து, 54 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். இப்போது முன்கூட்டியே பணம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே இதற்கென புதிதாக நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.
நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியை அதிகரித்து அளிப்பதாகக் கூறுவதும் பெரிதாகப் பலனளிக்காது என்கிறார் அவர். "நூறு நாள் வேலைத்திட்டமே சரியாக செயல்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில், அந்தத் திட்டத்தில் கூடுதலாக சம்பளம் அளிப்பதால் பெரிதாக என்ன பயன் கிடைத்துவிடும்? எல்லாம் மூடப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் யார் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்போகிறார்கள்? விவசாயிகளுக்கு மிக இக்கட்டான சூழல் இது. ராபி பருவத்தில் விதைத்தவர்கள் அறுவடை செய்யும் நேரம். அவர்கள் அறுவடைசெய்து எங்கே விற்பார்கள் எனத் தெரியவில்லை" என்கிறார் ஜோதி சிவஞானம்.
நியாயவிலைக் கடைகளில் பொருட்களை இலவசமாக அளிப்பது நல்ல திட்டம் என்றாலும், யார் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமாகப் பலன்பெற வேண்டுமோ அவர்களுக்கு இந்தத் திட்டம் பலனளிக்குமா என்பது சந்தேகம்தான். "புலம்பெயர் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த இலவசப் பொருட்கள் உதவியாக இருக்கும். ஆனால், அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். அவர்களது குடும்ப அட்டை எங்கோ இருக்கிறது. இந்தத் திட்டத்தால் அவர்கள் எப்படிப் பயன்பெற முடியும்?"
புலம்பெயர்ந்து வேலைசெய்யும் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள். நாடு முழுவதும் கூலியில் உள்ள வேறுபாடே இந்தப் புலம்பெயர்தலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் கூலி அதிகமாக இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெங்களூரிலும் கேரளாவிலும் கிடைக்கும் கூலி அதிகமாக இருக்கிறது. ஆகவே புலம்பெயர்தல் என்பது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.
"இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை விமானம் அனுப்பி நம் நாட்டுக்கு அழைத்துவருவதில் காட்டும் அக்கறையை இவர்கள் விஷயத்திலும் காட்ட வேண்டும். இந்தக் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அறிவிப்புகள், ஏதோ புதிய திட்டங்களை அறிவிப்பதைப் போலவே செய்கிறார்கள். இது மிகப் பெரிய மனித நெருக்கடி" என்கிறார் ஜோதி சிவஞானம்.
இதற்கு அடுத்த நாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பல்வேறு தளர்த்தப்பட்ட நிதிக் கொள்கைகளை அறிவித்தார். ஆனால், அதனால் பெரிய பலன் ஏற்படாது என்கிறார் ஜோதி சிவஞானம்.
"நமது பொருளாதாரம் ஏற்கனவே மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. இந்தக் கொரோனா நெருக்கடி நீங்கிய பிறகு, மிகப் பெரிய பொருளாதார பெருமந்தம் ஏற்படும். மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும். ரிசர்வ் வங்கி ஆளுநரின் எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால், அதற்கு எந்த அளவுக்குப் பலன் இருக்குமென்பது தெரியவில்லை".
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த வட்டிவிகிதம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகக் கடன் கொடுக்க முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஏனென்றால் வராக்கடனின் அளவு மிகப் பெரியதாக இருக்கிறது.
"'ரிவர்ஸ் ரெபோ' விகிதத்தைக் குறைத்தால் வங்கிகள் அதிகம் கடன் கொடுக்கும் என ஆளுநர் நம்புகிறார். ஆனால், அப்படி நடக்கவில்லை. வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டிற்கு குறைவான வட்டி அளிக்கும் என்பதால், வங்கிகளில் உள்ள டெபாஸிட்டுகளும் குறையும்" என்கிறார் சிவஞானம்.
கடன் தவணைகள் தள்ளிப்போட்டிருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் அவர். ஆனால், ஆளுநர் அறிவித்த ஒரு அம்சம் ஓரளவுக்குப் பலனளிக்கக்கூடியது என்கிறார் ஜோதி சிவஞானம்.
"வர்த்தக நிறுவனங்களுக்கான வங்கிக் கணக்குகளில் இருந்து, 'ஓவர் ட்ராஃப்ட்'ஆக எடுக்கும்போது, அதற்கான வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், எடுத்துக்கொள்ளக்கூடிய பணத்தின் அளவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது ஓரளவுக்கு பலனளிக்கும். இதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் பணம் சந்தைக்குக் கிடைக்கும். ஆனால், இது செயலாக்கம் பெறுமா என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால், முன்பும் இதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டபோது அப்படி நடக்கவில்லை" என்கிறார் ஜோதி சிவஞானம்.
இந்தியாவில் வேலை பார்ப்பவர்களில் 40-50 சதவீதம் பேர் சிறு, குறு, மத்திய தொழில்துறையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைகள் வராவிட்டால், தொழிலாளர்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள். இது மிகப் பெரிய நெருக்கடியை இந்தியா முழுவதும் உருவாக்கும்.
"இந்த ஆண்டு சுமார் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்குமென்றார்கள். ஆனால், இப்போது உள்ள நிலையைப் பார்த்தால், முன்னோக்கிய வளர்ச்சி இல்லாமல் எதிர்மறை வளர்ச்சி இருக்குமெனத் தோன்றுகிறது. அப்படி இருந்தால், அது மிகப் பெரிய பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தும்" என்கிறார் ஜோதி சிவஞானம்.
தவிர, பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், சலுகைகள் ஆகியவற்றை முன்பே அறிவித்துவிட்டு, கால அவகாசம் கொடுத்து ஊரடங்கை அறிவித்திருக்கலாம். அப்படி இல்லாததால்தான் இவ்வளவு பெரிய பரிதவிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.