வைரஸை பரப்ப சொல்லி பிரச்சாரம்: ஐடி ஊழியர் கைது!
28 Mar,2020
பெங்களூரில் வைரஸை பரப்ப சொல்லி சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஐடி ஊழியர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வராமல் தடுக்க ஒரு பக்கம் அரசும், காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆபத்தான தகவல்களை பரப்புவோர் மறுபுறம் பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பியதாக சமீபத்தில் தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
இதுபோன்றதொரு சம்பவம் பெங்களூரிலும் நடந்துள்ளது. பெங்களூர் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவன ஊழியர் முஜீப் முகமது என்பவர் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் வைரஸ் பரவியர்கள் பொது இடங்களுக்கு சென்று கை குலுக்குங்கள், தும்முங்கள். கொரோனாவை பரப்பி உலகை முடிவுக்கு கொண்டு வருவோம் என ஆபத்தான பிரச்சாரம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
அவரது இந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்த பெங்களூர் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அவரை பணியிலிருந்து நீக்கி விட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அபாயகரமான, போலியான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.