தமிழ்நாட்டில் மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி நியூசிலாந்திலிருந்து வந்த 65 வயது ஆண், லண்டனிலிருந்து வந்த 25 வயது நபர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்மணி வெளிநாட்டிற்கு பயணம் ஏதும் மேற்கொள்ளாதவர்.
நியூசிலாந்திலிருந்து வந்தவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். லண்டனிலிருந்து திரும்பிய இளைஞர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையிலும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி கீழ்ப்பாக்கத்திலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று மதுரையில் அடையாளம் காணப்பட்ட ஒருவர், பயணம் ஏதும் மேற்கொள்ளாதது கண்டறியப்பட்டது. தற்போது சென்னையிலும் இதுபோல ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரவு பத்து மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உள்ள அனைவருக்குமே பயணப் பின்புலம் இருப்பதாகத் தெரிவித்தார்.
"தமிழகத்தில் புதிதாக 100 ஆம்புலன்சுகள் ஆம்புலன்சுகள் வாங்கப்படவிருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் கண்டிப்பாக 28 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும். இது அரசின் உத்தரவு. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட்கூட முடக்கப்படலாம்." என்று தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 15,298 பேர் வீட்டிலேயே தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வீடுகளின் வாசல்களில் இதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் ஊர்க்காவல் படையினர் காவலில் இருப்பதாகவும் தெரிவித்த விஜயபாஸ்கர், இவற்றை மீறியும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வயதானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீரக நோயாளிகள், எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், முதியவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் நடமாடும் மருத்துவக் குழுவினர் வீட்டிற்கே வந்து மருந்துகளை வழங்குவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு முகமூடிகள், உபகரணங்கள் இருப்பதாகவும் பெரும் சவாலுக்கிடையில் அவை தமிழ்நாட்டிற்குத் தேவையான அளவிற்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 18 பேர் கொரோனா நோய் தொற்று தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், மதுரையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும் இன்று சென்னையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும் பயணப் பின்புலம் இல்லை. ஆனால், அவர்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக விஜயபாஸ்கர் கூறினார்.
மதுரை நோயாளியைப் பொறுத்தவரை, பெருந்துறையில் கொரோனா தாக்கி சிகிச்சைபெற்று வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பழகியதாலேயே அந்நோய் பரவியிருப்பது தெரியவந்திருப்பதாக விஜயபாஸ்கர் கூறினார்.
இன்று சைதாப்பேட்டையில் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட 55 வயது பெண்மணியின் மகன் லண்டனுக்குச் சென்று வந்திருக்கும் நிலையில், அவரிடமிருந்து தாய்க்கு பரவியிருப்பது தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது அறியப்பட்டிருக்கும் நிலையில், மேலும் மூன்று பேருக்கு அந்நோய் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய போரூரைச் சேர்ந்த 72 நபர் ஒருவருக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய புரசைவாக்கத்தைச் சேர்ந்த 52 வயது பெண்மணி ஒருவருக்கும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து திரும்பிய கீழ்க்கட்டளையைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய இருவருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 12 பேருக்கு கொரோனா நோய் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருவதாகவும் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாமென்றும் கூறினார்.
மதுரை நோயாளியின் நிலை என்ன?
இதற்கிடையில், மதுரையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 54 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்திருக்கிறார். அவருக்கு கொரோனா நோய் தவிர, ஏற்கனவே நுரையீரல் நோயும் இருப்பதால் ஆக்ஸிஜனை கிரகிப்பதில் பிரச்சனை இருப்பதாகவும் மற்றபடி அவர் உடலில் பிரச்சனை ஏதும் இல்லையென்றும் செயற்கை சுவாசக் கருவி இல்லாமலேயே சுவாசிப்பதாகவும் கூறினார். அவருடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் திங்கட்கிழமை ஒரு விழாவில் பங்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 60 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களது விவரங்கள் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
இது தவிர, அந்த நபர் சென்ற வழிபாட்டுத் தலத்திற்கு தொடர்ச்சியாக வருபவர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுவருகின்றன. தற்போது மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் 7 பேர் கொரோனா நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படுமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.