கொரோனா எதிரொலி: டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டனர் 4000பேர்
23 Mar,2020
டெல்லி அடுத்துள்ள நொய்டாவின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 4000 பேருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் துருக்கி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
மேலும் அவர், நொய்டாவின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ளவர்களுடன் ஹோலிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் 3 வாரம் கடந்து அவருக்கு உடல் நலம் மோசம் அடைந்தமையினால் அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது கொரோனா சோதனை நடத்தப்பட்டது. குறித்த சோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே ஹோலிப் பண்டிகையில் கலந்துகொண்ட 4000 பேரையும் தனிமைப்படுத்தி வீட்டை விட்டுச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.