உ.பி.யில் கொரோனா நிவாரணமாக 1 கோடி தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம்
22 Mar,2020
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிவாரண உதவிகளை அறிவிப்பதில் முந்திக்கொண்டுள்ளது.இதையொட்டி அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநில அரசு உஷாராக உள்ளது. முன்எச்சரிக்கை உணர்வுடனும் இருக்கிறது.
35 லட்சம் தொழிலாளர்களுக்கு பராமரிப்பு செலவாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக தலா ரூ.1,000 வழங்கப்படும். இந்த தொகை, நேரடி வங்கி பண பரிமாற்ற முறையில் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக்கணக்குகளில் உடனடியாக செலுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள 1 கோடியே 65 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கும், அந்தியோதயா யோஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் மாதம், ஒரு மாதத்துக்கு உரிய ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்களுக்கான கூலித்தொகையை உடனடியாக விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
22-ந் தேதி (இன்று) மக்கள் சுய ஊரடங்கையொட்டி, பொதுமக்கள் தயவு செய்து வீடுகளுக்குள் தங்கி இருங்கள். மெட்ரோ ரெயில்கள், நகர பேருந்துகள் மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்காது.
அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைக்கக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.