கொரோனாவின் ஆதிக்கம்: வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை விதித்தது இந்தியா!
20 Mar,2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால், மார்ச் 22ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச பயணிகள் விமானங்கள் வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 174 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவசர, அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும், அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும், விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.