இந்தியாவில் 120 ஆக உயர்வு ;விமானத்தில் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி?
17 Mar,2020
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 725 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என அம்மாகாண ஆளுநர், அதிபர் டிரம்புக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை ஒட்டிய தனது எல்லைப் பகுதிகளை இன்று காலை முதல் மூடுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,372 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 21-ஆக இருக்கிறது. 14,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 259 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது .இதை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.