நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகுமாறு சிறை நிர்வாகம் உத்தரவு
16 Mar,2020
நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடும் பணியில் ஈடுபட மூன்று நாட்களில் தயாராகுமாறு மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012இல் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கிலிடுவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. அவர்களைத் தூக்கிலிடும் சிறை ஊழியர் திகார் சிறைக்கு மூன்று நாட்களில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதை திகார் சிறையின் அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகள் தங்களது தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிடக் கோரும் சட்டத் தீர்வுகளை மேற்கொண்டதால் மூன்று முறை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்றும் உத்தரவு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களுக்கு மார்ச் 20இல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் புதிய உத்தரவை டெல்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, தூக்கிலிடும் ஊழியர் பவன் ஜல்லத்தை இந்தப் பணியில் ஈடுபடுத்த அனுப்பி வைக்குமாறு உத்தரப் பிரதேச மாநில சிறைத் துறைக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதுகுறித்து திகார் சிறைத் தலைமை இயக்குநர் சந்தீப் கோயல் கூறுகையில், ‘தூக்கிலிடும் பணியை மேற்கொள்வதற்காக, உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் சிறை ஊழியர் பவன் ஜல்லத், மார்ச் 17ஆம் திகதி திகார் சிறைக்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்’ என தெரிவித்தார்.
திகார் சிறை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘பவன் ஜல்லத் வந்த பின்னர், தூக்கிலிடுவது தொடர்பாக ஒத்திகை நடத்தப்படும். சிறையில் உள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் தினசரி உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி அடிப்படையில் அவர்களுக்கு மனநல ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டனர்.
குற்றவாளிகள் நால்வரில் முகேஷ், பவன், வினய் ஆகியோர் தங்களது குடும்பத்தினரை நேருக்கு நேர் சந்தித்தனர். அதேபோன்று, தூக்கிலிடுவதற்கு முன்பாகஇறுதியாக சந்திப்பதற்கு வருமாறு குற்றவாளி அக்ஷய் குமாரின் குடும்பத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் வாரந்தோறும் குற்றவாளிகள் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து வருவதை சிறை நிர்வாகத்தினர் இன்னும் நிறுத்தவில்லை என்று திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன