கொரோனா வைரஸ் : சென்னை விமான நிலையத்தில் 24 விமானங்கள் இரத்து!
15 Mar,2020
கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி குவைத், துபாய், சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 24 விமானங்கள் இன்று (சனிக்கிழமை) இரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிரிக்கெட் போட்டிகள் இரத்து, கோயில்களுக்கு வர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஏர் இந்தியா 7 நாடுகளுக்கான தங்களின் விமான சேவையை இரத்து செய்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது