கொரோனா வைரஸ் – இத்தாலியில் தவித்த 218 பேரை மீட்டது மத்திய அரசு
15 Mar,2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இத்தாலியில் சிக்கி தவித்த 55 தமிழக மாணவர்கள் உட்பட 218 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்.
மத்திய அரசின் முயற்சியால் அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக எயார் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் 55 தமிழக மாணவர்கள் உட்பட 218 பேர், கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்டு வருவதற்காக, ‘எயார் இந்தியா’ நிறுவனத்தின் சிறப்பு விமானம் நேற்று இத்தாலி புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், 218 பேரையும் மீட்ட எயார் இந்தியா விமானம் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 131 மாணவர்கள், 103 யாத்ரீகர்கள் என 234 பேரையும் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய ஈரானில் சிக்கிய 234 இந்தியர்களும் மும்பை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.