கொரோனா தாக்குதலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு - இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆனது
14 Mar,2020
டெல்லியில் 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழந்தார். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவிலும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய கர்நாடக மாநிலம் குல்பர்கி பகுதியை சேர்ந்த 76 வயது நிரம்பிய முகமது உசேன் என்ற நபர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உசேன் இறந்தார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உயிரிழந்த முகமது உசேனின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முகமது உசேன் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என தெரிய வந்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.