சாலையோரங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்ற ‘மொபைல் செயலி’
11 Mar,2020
கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்த தகவலை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைவிடப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து போலீசாரின் மொபைல் செயலியில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், பழைய மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்கள், யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.
இதுபோன்ற யாரும் உரிமை கோராத கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி சென்னை பெருநகர மாநகராட்சியில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சாலைகளில், யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்கள் குறித்த தகவலை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ‘GCTP Citizen Services’ Mobile App என்ற கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்து மேற்படி வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.