இந்தியாவையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா – ஒருவர் உயிரிழப்பு: 63 பேர் பாதிப்பு
11 Mar,2020
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரஸினால் இதுவரை 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவியுள்ளது.
வைரஸ் காரணமாக இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 64 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கேரளா முழுவதும் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 1,496 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,236 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். 259 பேர் வைத்தியசாலையகளில் உள்ள தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை 970 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 815 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அவர்களுக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு விடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பொதுத்தேர்வும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரளாவில் பொது விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், மசூதிகளில் அதிகளவில் மக்கள் திரள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்