கொரோனா அச்சம்... சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து
09 Mar,2020
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளது. இதனால் அந்தந்த நாடுகள் சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பொது நிகழ்ச்சிகளையும், தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் , கொரோனா அச்சம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
உலக அளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. சீனாவில் மட்டும் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சம் காரணமாக குவைத், ஹாங்காங், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளதாக கூறி உள்ளனர்.