ஈரானில் கொரோனா தாக்கம்: ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு ; தமிழக மீனவர்கள் தவிப்பு
03 Mar,2020
ஈரானில் கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து செல்லுமாறு ஈரான் அரசு கேட்டு கொண்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் சீனாவில் குறைந்துள்ளதாக கருதப்படும் அதே வேளையில் பிற நாடுகளில் அதன் வேகம் அதிகரித்துள்ளது.
ஈரானில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில்,உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.இந்த சூழலில் ஈரான் விமானங்கள் இந்திய வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துச் செல்லுமாறு மத்திய அரசை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானின் கிஷ் துறைமுகம் பகுதியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள் 300 பேரும் துறைமுகங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துறைமுகங்கள் மூடப்பட்டதால், நாடு திரும்ப முடியாமல் மீனவர்கள் திகைத்து நிற்கின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அரசு மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.