சடலங்களை பதப்படுத்த உபயோகிக்கும் ரசாயனத்தை மீன்களில் கலந்த வியாபாரிகள்!
                  
                     02 Mar,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	சடலங்களை பதப்படுத்த பயன்படும் பார்மலின் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.. பிரசித்தி பெற்ற மதுரை கரிமேடு சந்தையில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் அங்கு உள்ள 72 கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 2 டன் மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவற்றில் பார்மலின் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
	  
	சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த பார்மலின் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் பூசுவதால் மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாது என்றும் புத்தம் புதிதாக காட்சியளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பார்மலின் தடவிய மீன்களில் ரசாயன வாடை வீசாது என்றும் கூறுகின்றனர். மீன்களை உட்கொள்வோருக்கு ஒவ்வாமை வாந்தி, தலைவலி சோர்வு, மந்த நிலை உள்ளிட்டவை ஏற்படும் என்றும் கிட்னி பாதிப்பு கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	இந்நிலையில் கரிமேடு மீன் மார்க்கெட்டில் வெளி மாநில மீன்கள் தரம் குறைந்தும், கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மீன் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.