2019 பிப்ரவரி 28, அன்று, செளதி அரேபிய தொலைபேசி எண்ணில் இருந்து அபிநந்தனின் மனைவி தன்வி மர்வாவின் மொபைலில் அழைப்பு வந்தபோது, வருத்தத்தில் இருந்த அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
மறுமுனையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து. தன்வியின் கணவர் விங் காமாண்டர் அபிநந்தன் பேசிக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முயற்சியில் இந்த அழைப்பு செளதி அரேபியா வழியாக வந்தது.
ஒருபுறம், ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள், அபிநந்தன் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள்.
மறுபுறம், ஒருவர் அபிந்ந்தனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். சிறைபிடிக்கப்பட்ட ஒரு நபர் இந்த பாணியில் நடத்தப்படுவதை “Good cop/ Bad cop” நடைமுறை என்று கூறுவார்கள்.
சிறையில் வைக்கப்பட்ட நபரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறும் நோக்கில் ஒருபுறம் நட்பாகவும், மறுபுறத்தில் மோசமாகவும் நடத்துவார்கள்.
அதே நாளன்று, அபிநந்தனை பாகிஸ்தானில் வைத்திருக்கும் விருப்பம் இல்லை என்றும் அவரை விடுவித்து விடுவதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றார்கள். ஆனால் இது புத்திசாலித்தனமான முடிவா என்ற கேள்விகளும் பரவலாக எழுந்தன.
அபிநந்தன் விடுதலையை சூசகமாக முதலில் தெரிவித்த டிரம்ப்
மறுபுறம், இந்தியாவின் கடுமையான அணுகுமுறைக்கு பயந்து இம்ரான் கான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக காட்டிக் கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் இந்தியாவின் அரசியல் தலைமை தவறவிடவில்லை.
மார்ச் 5 ம் தேதி ஜார்க்கண்டின் கோடாவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, “அவர் எங்கள் விமானியைப் பிடித்தார், ஆனால் பிரதமர் மோடியின் அழுத்தத்தின் காரணமாக 48 மணி நேரத்திற்குள் அவரை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
ஆனால் அமித் ஷா இப்படி சொல்வதற்கு முன்பே அபிநந்தன் விடுவிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று, ஹனோய் நகரில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த அவர், “விரைவில் பாகிஸ்தானிலிருந்து நல்ல செய்தி வரும் என்று நான் நினைக்கிறேன், அதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறினார். அதற்கு சில மணி நேரதில், அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவித்தார்.
செளதி பட்டத்து இளவரசர் சல்மானின் முக்கியப் பங்களிப்பு
ஆனால் அமெரிக்காவைத் தவிர, செளதி அரேபியாவும் இந்த விஷயத்தில் முக்கிய பங்கு வகித்தது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற உடனேயே, செளதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மான் முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார்.
ராஜீய யுக்தியின் மூலம் விஷயங்கள் நடப்பதை இந்திய வெளியுறவு விவகார நிபுணர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் செளதி பட்டத்து இளவரசரின் முழு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோதிக்கு, அதை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை.
அத்துடன், செளதி அரேபியாவின் துணை வெளியுறவு அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டின் போது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் இந்த விவகாரம் பற்றியும் பேசினார்.
இந்தியாவின் இந்த பிரச்சனையைத் தீர்க்க செளதி அரேபியா ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன? செளதி அரேபியாவிற்கான இந்தியாவின் தூதராக இருந்த தல்மிஸ் அகமது அதற்கான விளக்கத்தைக் கூறுகிறார்.
‘இரான் எதிர்ப்பு கூட்டணியில் பாகிஸ்தானை தன்னுடன் வைத்திருக்க செளதி அரேபியா விரும்புகிறது. அதே நேரத்தில், இரானிடம் இருந்து இந்தியாவை விலக்கி வைப்பதற்கான ஒரு கோணத்திலும் அது செயல்பட்டுவருகிறது.’
பாதுகாப்பு கவுன்சிலின் 5 பெரிய நாடுகளை தொடர்பு கொண்ட பாகிஸ்தான்
பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளையும், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களையும் தொடர்பு கொண்ட பாகிஸ்தான், “பாலகோட்டைத் தாக்கியதுடன் இந்தியா திருப்தி அடையவில்லை என்று அது தெரிவித்தது.
இந்திய கடற்படைக் கப்பல்கள் கராச்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன, பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பாகிஸ்தானைத் தாக்க முயற்சி நடக்கிறது என்றும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்தியத் துருப்புக்களின் இயக்கம் தீவிரமடைந்துள்ளது” என்றும் முறையிட்டது. இந்த தகவலால் கவலையடைந்த பல நாடுகள் இந்தியாவை தொடர்பு கொண்டன.
இந்தியாவின் உளவு நிறுவனமான ராவின் முன்னாள் அதிகாரி, பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு சில விவரங்களைத் தெரிவித்தார்.
“இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்துவிட்டது. உண்மையில், தனது கடற்படைக் கப்பல் கராச்சியில் இருந்து எதிர் திசையை நோக்கி செல்கிறது என்று கூறியது.
இந்த இயக்கத்தை செயற்கைக்கோள்களிலிருந்து பார்க்கும் திறனும் இந்த நாடுகளுக்கு உண்டு, அவர்கள் விரும்பினால், அவர்கள் பாகிஸ்தானின் கூற்றை சுயாதீனமாக உறுதி செய்துக் கொள்ளலாம்’ என்று இந்தியா உறுதியாக கூறிவிட்ட்து.
ஒரு இந்திய விமானத்தை சுட்டு, இந்திய விமானி ஒருவரை பாகிஸ்தான் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கிறீர்களா என்று இந்த நாடுகள் இந்தியாவிடம் கேட்டன.
அதற்கு கம்பீரமாக பதிலளித்த இந்தியா, ‘இப்போது, பந்து பாகிஸ்தானின் தரப்பில் தான் உள்ளது. பதற்றம் குறைய வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பினால், அதை முதலில் இந்த திசையில் செய்ய வேண்டும்.
அபிநந்தனுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தாலோ, அவரை உடனடியாக விடுவிக்காவிட்டாலோ, அதன் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் இந்தியா தெளிவுபடுத்தியது” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் எச்சரிக்கை
இது மட்டுமல்லாமல், அபிந்தந்தனை கடுமையாக நடத்தினால், அதன் விளைவுகளைத் தாங்க பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.யின் தலைமை லெப்டினன்ட் ஜெனரல் அசீம் முனீருடன் நேரடியாகப் பேசிய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இயக்குநர் அனில் தாஸ்மனா தெளிவுபடுத்தினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
அதே நேரத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ ஆகியோரிடம் ஹாட் லைனில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விங் கமாண்டர் அபிநந்தனை தவறாக நடத்தினால் இந்தியா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதோடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவுடன் பேசிய தோவல் மற்றும் தாஸ்மனா, இந்தியாவின் நோக்கம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
பாகிஸ்தானின் பெரிய நகரங்களில் பிளாக் அவுட்
அதே நேரத்தில், பிப்ரவரி 27ஆம் தேதியன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை இந்தியா 9 ஏவுகணைகளுடன் பாகிஸ்தானைத் தாக்கப் போவதாக பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைக்கு உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தன.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் 13 ஏவுகணைகளுடன் இந்திய இலக்குகளை தாக்க திட்டமிட்டது பாகிஸ்தான். இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியின் பாதுகாப்பு தளங்களைச் சுற்றியுள்ள வான்வழிகளை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“இந்திய ராணுவ இயந்திரங்கள் ‘ரெட் அலர்ட்’ நிலைக்கு சென்றுவிட்டதை அறிந்த பிறகு தான், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை, இந்திய விமானியை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், நாளை பிரதமர் இம்ரான் கான் இதை அறிவிப்பார் என்றும் டெல்லிக்குத் தெரிவித்தது” என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரும் சில பாதுகாப்பு வல்லுநர்களும் நம்புகின்றனர்.
செளதி அரேபியாவின் ராஜீய முயற்சிகள்
இதற்கிடையில், செளதி அரேபியாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் அடெல் அல் சுபைர் ஷாஜாதே, பட்டத்து இளவரசர் சல்மானின் செய்தியுடன் இஸ்லாமாபாத் சென்றார்.
அதே நேரத்தில், இந்தியாவிற்கான செளதி அரேபியாவின் தூதர் டாக்டர் செளத் முகமது அல்-சதி பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு முன்பே, செளதி அரசாங்கத்தின் மீது மோதி அரசு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது.
இந்த நேரத்தில், ஷாஜாதே சல்மான் மற்றும் பிரதமர் மோதியின் தனிப்பட்ட ‘நட்பும்’ மிகவும் வலுவாக இருந்த்து. தீவிரவாதம் குறித்த பாகிஸ்தானின் அணுகுமுறைக்கு எதிராக செளதி அரேபியா ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியது.
அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
புல்வாமா தாக்குதலின்போது, பாகிஸ்தானை ஆதரிப்பதற்குப் பதிலாக, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டது செளதி அரேபியா.
தந்திரோபாய விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், “இந்த விவகாரம் மேலும் சூடுபிடிப்பதை செளதி அரேபியா விரும்பவில்லை என்பதோடு, இந்தியா அல்லது பாகிஸ்தான் என எதாவது ஒரு நாட்டிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதையும் அது விரும்பவில்லை.”
“பாகிஸ்தானும் செளதி அரேபியாவும் நீண்ட காலமாக முக்கியமான விஷயங்களில் பரஸ்பரம் மிக நெருக்கமான புரிதலைக் கொண்டிருந்தன.
எனவே, பாகிஸ்தானிடம் பின் வழியாக (Back Channel)’ முயற்சித்த செளதி அரேபியா, இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. நடுநிலையான முடிவு ஏற்பட்டால், பிரச்சனை செய்யாமல் இருப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இந்தியாவிடம் இருந்து ஒரு சமிக்ஞை கிடைத்த நிலையில், செளதி அரேபியா பாகிஸ்தானை அணுகியது” என்று விளக்குகிறார் ஹர்ஷ் பந்த்.
பதற்றத்தை குறைக்க முயற்சிக்காவிட்டால், பாகிஸ்தானுடன் நிற்கும் நிலையில் செளதி இருக்காது என்ற விஷயம் பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தப்பட்டது’ என்கிறார் ஹர்ஷ் பந்த். இஸ்லாமிய நாடுகளில் தனிமைப்படுத்தப்படலாம் என்று பாகிஸ்தானுக்கு அச்சம் ஏற்பட்டது.
இதுபற்றி மேலும் கூறும் ஹர்ஷ் பந்த், ‘செளதி அரேபியா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் கீழ் இருந்தது, தனது அணுகுமுறை தொடர்ந்தால், இஸ்லாமிய உலகில் வீழ்ச்சியடையும் என்று பாகிஸ்தான் உணர்ந்தது.
மேற்கு நாடுகளின் அழுத்தத்தை ஓரளவிற்கு தாங்க பாகிஸ்தான் தயாராக இருந்திருக்கலாம், ஆனால் செளதிக்கு எதிராக ஒரு ‘நிலைப்பாட்டை’ எடுத்து விட்டால், இஸ்லாமிய நாடுகள் கூட பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு தயங்கும் நிலை ஏற்படலாம் என்ற இக்கட்டான நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது’ என்கிறார் ஹர்ஷ் பந்த்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் திலக் தேவேஷ்வர் கூறுகையில், “தன்னுடைய தற்போதைய நிலைப்பாட்டையே தொடர்ந்தால், எந்த நாடுகளும் தங்களுடன் நிற்காது என்பதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளோ அல்லது இஸ்லாமிய நாடுகளோ தங்களுடன் நிற்கும் என்று பாகிஸ்தான் நம்பியிருந்தல், பதற்றத்தை அதிகரிப்பது பற்றி அது கவலைப்பட்டிருக்காது.
ஆனால், இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தால் பாதகமே அதிகம் என்பதை உணர்ந்ததால், அபிநந்தனை விடுதலை செய்து, பதற்றத்தை குறைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.
அமெரிக்கா மற்றும் செளதியின் அழுத்தத்தில் பாகிஸ்தான் இருந்த அதே நேரத்தில், அதற்கு தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன’ என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் திலக் தேவேஷ்வர்.