கொரோனா வைரஸ் பாதிப்பு – 18 டன் மருந்துகளுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது
27 Feb,2020
சீனாவில் உயிர்பலி வாங்கி வருகிறது கொரோனா வைரஸ். நேற்று வரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,715 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்து 64 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சீனாவின் நட்பு நாடாக திகழும் இந்தியா, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவ முன்வந்தது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள உகான் நகருக்கு விமானத்தை இயக்க சீனா அனுமதி மறுத்து விட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால் அதனை சீனா மறுத்து விட்டது.
இதற்கிடையே கடந்த 8-ந்தேதி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்திய விமானம் செல்ல சீனா அனுமதி அளித்தது. இதையடுத்து 18 டன் மருந்து பொருட்களுடன் சி-17 ரக இந்திய ராணுவ விமானம் நேற்று சீனா புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சீனாவுக்கு இந்த மருந்துபொருட்கள் உதவியாக இருக்கும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள உகான் பகுதியில் மருந்துகளை வினியோகிக்குமாறு சீனாவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்தியர்களையும், அண்டை நாட்டை சேர்ந்தோரையும் அழைத்து வர உள்ளது. சீனாவில் இருந்து இன்று (வியாழக்கிழமை) விமானம் இந்தியா திரும்பி வரும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 1 மற்றும் 8-ந்தேதிகளில் சீனாவில் இருந்து 647 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.