இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை.
எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற அனைத்து மொழிகளுக்கும் ஒரே அளவிலான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
மொழி ( Scroll )
1950ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 அன்று, உருதுமொழி திணிப்புக்கு எதிராகப் போராடிய தாகா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான் அரசு.
கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் எனப் பிரிக்கப்பட்டிருந்த இரண்டு நாடுகளும் ஒரே மதத்தைப் பின்பற்றிய போதும் மொழி என்ற அம்சத்தில் வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டதாக இருந்தன.
உருதுமொழிக்கு எதிராக, வங்க மொழி பேசும் மாணவர்களின் கிளர்ச்சியை நினைவுகூர, பிப்ரவரி 21 ஒவ்வோர் ஆண்டும், ‘உலகத் தாய்மொழி தினமாக’ அனுசரிக்கப்படும் என்று 1998ஆம் ஆண்டு அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.
இதே பிப்ரவரி 21-ஆம் நாளுக்கு மொழி தொடர்பான மற்றொரு வரலாறும் உண்டு. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை மாகாணத்தில் கட்டாயப் பயிற்றுமொழியாக இந்தியை அறிவித்தார் அன்றைய மாகாண முதல்வர் ராஜாஜி. தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தது.
தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. இந்தப் போராட்டத்தில் நடராஜன், தாளமுத்து ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
‘மொழிப்போர் தியாகிகள்’ என்று இன்றுவரை நடராஜனும், தாளமுத்துவும் கொண்டாடப்படுகிறார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவாக, 1940ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 அன்று, இந்தி குறித்த அரசாணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு.
மொழிகள்
உலகத் தாய்மொழிகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் உலக மொழிகளின் பன்மைத்துவத்திற்காகவும் மொழிகளின் பாதுகாப்புக்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேசம் – அரசு என்ற கருத்தாக்கத்தில், மக்கள் வாழும் தற்போதைய உலகளாவிய அரசியல் சூழலில், பல்வேறு அரசுகள் தங்கள் ஆளும் வர்க்கத்தின் மொழிகளைத் தங்கள் மக்களின் மீது திணித்து, அதனால் கடும் எதிர்ப்பைப் பெற்றிருக்கின்றன.
மொழி என்பது வெறும் தகவல் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல என்பதைக் கடந்த காலங்களில் வெவ்வேறு அரசுகளின், கலாசாரங்களின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளன.
மொழி என்பது அரசியலாக, அது பேசப்படும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் நிறுவக்கூடிய ஒன்று. தேசிய இனங்கள் என்று மக்கள் அறியப்படுவதற்கு, அவர்தம் வாழ்வில் பயன்படுத்தும் மொழி இன்றியமையாதது.
மொழிகள்
இந்தியா முழுவதும் ஏறத்தாழ 780 மொழிகள் பேசப்படுகின்றன என்று இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பின் தரவுகள் கூறுகின்றன.
இந்த அமைப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஏறத்தாழ 220 மொழிகள் அழிந்திருப்பதாகக் கூறுகின்றது. அதே வேளையில்,
இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருப்பதையும், இந்தியை அலுவல் மொழியாக மத்திய அரசு அறிவித்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை.
எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற அனைத்து மொழிகளுக்கும் ஒரே அளவிலான நிதி ஒதுக்கப்படுவதில்லை. உதாரணமாக, ஏறத்தாழ 7 கோடி மக்கள் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழ் மொழிக்குக் கடந்த ஆண்டு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், சுமார் 25 ஆயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சம்ஸ்கிருதம் மொழிக்குக் கடந்த ஆண்டு 231 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏறத்தாழ 8 கோடி மக்கள் பேசும் மொழிகளான மலையாளம், ஒடியா ஆகியவற்றிற்கு நிதியும், வளர்ச்சி நிறுவனமும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
இந்தி, சம்ஸ்கிருத மொழியின் தேவநாகிரி எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளது. இதை இந்தி, சம்ஸ்கிருதம் முதலான மொழிகள் திணிப்பு என்று பல்வேறு மாநிலங்களில் தாய்மொழிப் பற்றாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.
மேலும், சம்ஸ்கிருதம் என்பது பெரும்பான்மை மதத்தின் மொழியாகக் கருதப்படுவதால், அதை மத்திய அரசு முன்னிறுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
மேலும், பனாரஸ் பல்கலைக்கழகத்தில், சம்ஸ்கிருத மொழியைக் கற்றுத் தருவதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஃபிரோஸ் கான், தனது மத அடையாளம் காரணமாகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.
இந்தியாவின் மற்ற செம்மொழிகளைவிட ஏறத்தாழ 30 மடங்கு அதிக நிதி சம்ஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசினோம்.
“இரண்டு தேசிய கட்சிகளிலும் முடிவெடுப்பவர்களாக இருக்கக்கூடியவர்கள், அவர்களுடைய தாய்மொழியான சம்ஸ்கிருதத்தை உயர்த்த வேண்டும் என்பதிலும், அதனுடைய பெருமை பேச வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.
இது தாய்மொழி மீது பற்றுகொண்ட யாருக்கும் இயல்பானதே. ஆனால், அதை 130 கோடி மக்களின் வரிப்பணத்தை 24 ஆயிரம் பேர் பேசும் ஒரு மொழிக்குக் கொட்டி அழுவது என்ன நியாயம்? இப்படி செய்வதுதான் மொழிவெறி.
ஆனால் இந்தியாவில் இதைத் தட்டிக் கேட்பதும், எல்லா மக்களின் தாய்மொழிக்கும் உரிய பங்களிப்பைக் கொடுங்கள் என்று கேட்பதும் மொழிவெறி என்று சித்திரிக்கப்படுகிறது. இதன் பெயர்தான் சிறுபான்மையினர் ஆதிக்கம்” என்றார்.
அருள்மொழி
மேலும் அவர், “இந்தியாவில் மதவழியாக சிறுபான்மையினராக இருப்பவர்களுக்குக் காட்டப்படும் சில சலுகைகளே, தேசிய குற்றங்களாகக் காட்டப்படுகின்றன.
ஆனால், இந்தச் சிறுபான்மை மொழிக்குக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான தொகையும், மற்ற மொழிகளுக்கு இழைக்கப்படும் அவமானமும், இந்தியாவில் நடைபெறும் மொழிவழி சிறுபான்மையினர் ஆதிக்கத்தின் அடையாளம். சம்ஸ்கிருதமும் ஒரு மொழிதான். அதற்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், எல்லா மொழிகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய இடத்தைத் தவிர்த்து, ஒரு மொழியை முன்னிறுத்துவதன் பெயர்தான் அநீதி” என்றார்.
இதுகுறித்து பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் நாராயணன், “இது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் விஷயம். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலானவை பலரால் பேசப்படுகிற, வளர்ந்துவிட்ட மொழிகள்.
ஆனால், சம்ஸ்கிருதம் என்பது மேலும் வளர்க்கப்பட வேண்டிய மொழி. இவற்றைப் பேசுபவர்கள், உருது மொழிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து வாய்திறக்காமல் இருப்பது ஏன்? ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால், யாருக்கு உடல்நிலை சரியில்லையோ, அவர்களுக்கு அதிகம் செலவு செய்வது இயல்பு.
இதைக் கேள்வி கேட்க முடியாது. ஒரு மொழிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், ஒரு மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் பார்க்கப்படுவது தவறு.
இதற்கு முன் இருந்த அரசாங்கத்தை விட நூறு மடங்கு அதிகமாக உருது மொழிக்கு நிதி வழங்கப்பட்டது குறித்து பேசுங்கள்” என்று கூறினார்.
நாராயணன் திருப்பதி
தொடர்ந்து அவர், “தமிழ்மொழி பழைமையானதும், சிறந்ததும் ஆகும். அதை வளர்ப்பதற்குத் தனியாக நிதி என்பது தேவையில்லை. அதற்கு நமக்கு மதிதான் தேவை. தமிழ்மொழியை யாராலும் அழிக்க முடியாது.
சம்ஸ்கிருதம் என்பது யாருக்கும் தாய்மொழியில்லை. ‘பொதுவான அனைத்து மொழிகளிலிருந்தும் தொகுக்கப்பட்ட மொழி’ தான் சம்ஸ்கிருதம்.
தமிழைப் போன்று பழைமையான மொழி இது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளைப் போட்டியாகக் கருதுவதே தவறு. தமிழ் மீது அக்கறையில்லாதவர்கள்தான் இப்படி பேசுவார்கள்” என்றார்.
மாநில கட்சிகள் இந்த நடவடிக்கையை, `ஒரே தேசம், ஒரே மொழி’ என்ற பி.ஜே.பியின் கருத்தாகப் பார்க்கும் சூழலில், மத்திய அரசு சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம், அதிக நிதி முதலானவற்றை ஒதுக்குவது மேலும் சர்ச்சைகளாகி வருகிறது என்பதே கள நிலவரம்.