தமிழகத்திற்குள் வந்த சீனக் கப்பலால் சர்ச்சை!
17 Feb,2020
சீனர்கள், 14 பேருடன், தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு, மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, அதிகாரிகள் அனுமதியளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘கோவிட் – 19’ பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த 11ஆம் திகதி, மத்திய கப்பல்துறை இயக்குநர் அரவிந்த் சவுத்ரி, இந்தியாவில் உள்ள, அனைத்து துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், ‘சீனாவிற்கு சென்று வரும் கப்பல் ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ, எந்த துறைமுகத்திலும் நிறுத்துவதற்கோ, கப்பலில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்ககூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, சீனர்கள், 14 பேருடன், பனாமா சரக்கு கப்பல், தூத்துக்குடி, துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜன., 15ம் திகதி, சீனாவின் ஷியாமென் துறைமுகத்திற்கு சென்ற குறித்த கப்பல், 19ம் திகதி, ஷாங்காய், 28ம் திகதி, தாய்ஹாங் துறைமுகங்களுக்குச் சென்றுவந்துள்ளது.
கப்பலின் மாலுமி, வாங்க் லியாங்மிங் உட்பட, சீனர்கள், 14 பேரும், மியான்மர் நாட்டை சேர்ந்த நான்கு பேரும், கப்பலில் உள்ளனர். இந்நிலையில், இந்த கப்பல், 13ம் திகதி, தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சென்றுள்ளது. குறித்த, ‘ரூயி’ கப்பலை, தூத்துக்குடி துறைமுகத்திற்குள், அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
கப்பலில் வந்தவர்களுக்கு, ‘கோவிட் – 19’ சோதனை செய்யப்பட்டதா என்பதும் குறித்தும் தகவல் வௌியிடப்படவில்லை. கப்பலில் வந்த சீனர்கள் வெளியே சென்றுள்ளார்களா என்பது குறித்தும், துறைமுக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், தமிழகத்திலும், ‘கோவிட் – 19’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.