இளம்பெண் குழந்தைக்கு அப்பா அவரா? இவரா? குழம்பி தவிக்கும் அதிகாரிகள்
15 Feb,2020
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 4 பேருடன் வாழ்ந்த இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என தெரியாமல் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே கோரவள்ளி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது 8 மாத பெண் குழந்தையை விற்பனை செய்திருப்பதாக ‘சைல்டு லைன்’ அமைப்பிற்கு புகார் வந்தது.
இதன்பேரில் ‘சைல்டு லைன்’ அதிகாரிகள், கோரவள்ளி கிராமத்திற்கு சென்று, அந்த பெண்ணை மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலகத்தில் குழந்தையுடன் ஆஜராகுமாறு கூறிவிட்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 11ம் தேதி அலுவலகம் வந்த பெண்ணிடம், குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பெண் ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பகுதியை சேர்ந்த மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனத் தெரிந்தது.
இவருக்கும், கோரவள்ளி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ்க்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கட்டிட கூலி வேலைக்கு சென்று வந்த மீனாவுக்கு, ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் வசித்து வரும், ராமநாதபுரம், ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த வினோத்துடன் பழக்கம் ஏற்பட்டது.
இதன்பேரில் பால்ராஜ், மீனாவை ஊரார் முன்னிலையில் பேசி முடித்து தீர்த்து விட்டுள்ளார். வினோத் தன்னை ஒரு டிராபிக் போலீஸ் என்றும், தனக்கு இருதய நோய் இருப்பதால் வேலையை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டதாகவும் மீனாவிடம் கூறினார்.
இதையடுத்து இருவரும் ராமநாதபுரத்தில் குடியிருந்தனர். பின்னர் வெளிநாடு வேலைக்கு சென்றவர், இறந்து விட்டதாக மீனாவுக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து கோரவள்ளி பகுதியிலுள்ள 48 வயதுள்ள மாற்றுத்திறனாளியை, மீனா 3வது திருமணம் செய்து கொண்டு அவரோடு குடித்தனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் மீனா தன்னுடைய 8 மாத பெண்குழந்தையை விற்பனை செய்து விட்டதாக சைல்டு லைனிற்கு புகார் வந்திருக்கிறது.
புகார் செய்தது யார் என்று விசாரிக்கும்போதுதான், அதிகாரிகளுக்கு மேலும் தலைச்சுற்றல் அதிகரித்துள்ளது.
இந்த புகாரை கொடுத்தவர் உத்திரகோசமங்கை பகுதியை சேர்ந்த சரத். வெளிநாடு வேலைக்கு வினோத் சென்றபோது, சரத்துக்கும், மீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் உத்திரகோசமங்கையில் உள்ள சரத் வீட்டின் பின்பகுதியில் வசித்து வந்துள்ளனர். தற்போது சரத், ‘அந்த குழந்தை எனக்கு பிறந்தது.
ஆனால் என்னை விட்டுவிட்டு மீனா தலைமறைவாகி, குழந்தையை விற்பனை செய்து விட்டார்.
என்னை ஏமாற்றி விட்டார். என்னை அவரோடு சேர்த்து வைக்க வேண்டும். என்னுடைய குழந்தையை மீட்டுத் தரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் மீனாவோ, ‘அந்த குழந்தை வினோத்திற்கு பிறந்தது. அவர் இறந்து விட்டதால் அவரது சகோதரியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இவர்களின் ‘பஞ்சாயத்தில்’ குழந்தை யாருடையது என்று தெரியாமல் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்த குழந்தைகள் நல அதிகாரிகள், ‘யார் தந்தை’ என்பதை உறுதி செய்ய நீதிமன்றத்தை அணுகி, டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தி சரத் மற்றும் மீனாவை அனுப்பி வைத்துள்ளனர்.
ஏழுமலை என்ற தமிழ் சினிமாவில் பெண் ஒருவர், 4 ஆண்களுடன் குடும்பம் நடத்தி விட்டு, அது தொடர்பாக அவர் யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும்.
கடைசியில் போலீஸான வடிவேலு, சீட்டு போட்டு முடிவெடுக்கலாம் என்பார். இறுதியில் குலுக்கலில் தேர்வானவரின்றி வேறொருவர் அழைத்து செல்வார்.
அது போலவே இந்த பெண் பிரச்னையும் இருப்பதால், குழந்தையின் எதிர்காலம்தான் கேள்விக்குறியாகி உள்ளது.