ராஜிவ் கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை – தமிழக அரசு
13 Feb,2020
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத காவலில் இருப்பதாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “மாநில அரசின் பரிந்துரையை பரிசீலித்த பின், 7 பேர் விடுதலையை, மத்திய அரசு நிராகரித்தது. அதேநேரத்தில் விடுதலை கோரி பேரறிவாளன் அனுப்பிய தனி மனு மீது, ஆளுநர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரத்தின்படி, விடுதலை குறித்து முடிவெடுக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனவும் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது.
இதற்கு, நளினி தரப்பு வாதிட்டதில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநருக்கு கட்டுப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதிகள் நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா? என்பது குறித்து தமிழக அரசு இம்மாதம் 18ஆம் திகதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்