பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலைப்பாட்டை விளக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
12 Feb,2020
பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே கடந்த முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சி.பி.ஐ தரப்பில் உரிய புதிய நிலவர அறிக்கை தாக்கல் செய்யாததால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் அதன் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பு ஆஜரான மேலதிக தலைமை வழக்கறிஞர் பாலாஜி “ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என தெரிவித்தார்.