சைக்கோகொலைகாரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
05 Feb,2020
சேலத்தில் சாலையில் படுத்து உறங்கும் முதியவர்களின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டுவரும் சைக்கோ கொலைகாரனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சேலம் காசகரனூரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சாலையோர கடைக்கு வெளியே முதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, முதியவரின் பணத்தை கொள்ளையடுத்துச் செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதே போன்றதொரு சம்பவம், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலையில் அரங்கேறியுள்ளது. சாலையோர கடைக்கு வெளியே படுத்திருந்த அங்கப்பன் என்ற முதியவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இரு கொலைகளுக்கும் ஒரே சைக்கோ கொலைகாரன் தான் காரணம் என தெரிவித்துள்ள போலீசார் கொலைகாரனை தீவிரமாக தேடிவருகின்றனர். கொலைகாரரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் சைக்கோ கொலைகாரன் குறித்து தகவல் தெரிந்தால் 100 என்ற எண்ணிலோ, 9087200100 என்ற வாட்சப் எண்ணிலோ போலீசுக்கு பொதுமக்கள் தகவல் சொல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
சைக்கோ கொலைகாரன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது போல தெரிவதால், புகைப்படத்தில் உள்ள ஆடையுடனேயே வலம் வர வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.